பைப்லைன் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - பாஜக கோரிக்கை

உடன்குடி- சாத்தான்குளம் கூட்டுகுடிநீர் திட்டகுழாய்களை சரி செய்ய வேண்டும், இரண்டாவது பைப்லைன் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-07-02 04:47 GMT

ஆட்சியரிடம் மனு அளித்த பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அளித்துள்ள மனுவில், "கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உடன்குடி–சாத்தான்குளம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 308 கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகளுக்கு குடிநீரை வழங்கி வருகிறது. தற்போது மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரால் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. இதனால் உடன்குடி,சாத்தான்குளம் பகுதியில் உள்ள மக்களுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறையும் சில கிராமங்களில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர்கிடைப்பதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இவ்வாறு நிழவும் தட்டுபாட்டினால் கிராம மக்கள் அடிக்கடி பஞ்சாயத்து அலுவலகங்களை முற்றுகையிடுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள உடன்குடி மற்றும் சாத்தான்குளம் சுற்றுவட்டார பொதுமக்கள் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கவேண்டியதுள்ளது. சில மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதால் சிறுநீர கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைக்குள்ளாகின்றனர். உடன்குடி-சாத்தான்குளம் குடிநீர்திட்டம் 25 வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டது என்பதால் அடிக்கடி குடிநீர்குழாய்களில் உடைப்பு மற்றும் மின்மோட்டார்களில் பழுது ஏற்படுவதால் குடிநீர் வடிகால் ஊழியர்கள் மட்டுமல்லாது ஏற்கனவே குறைந்த அளவில்கிடைக்கும் குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஏற்கனவே உடன்குடி- சாத்தான்குளம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கூடுதலாக இரண்டாவது பைப்லைன் பதிக்கும் பணிக்கான பூமிபூஜைகள் நடந்தும் இதுவரையில் அதற்கான பணிகள் துவங்கியதாக தெரியவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடன்குடி – சாத்தான்குளம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட பழைய குடிநீர் குழாய்களை சீரமைத்தும், மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு உடன்குடி – சாத்தான்குளம் இரண்டாவது பைப்லைன் திட்டத்தை விரைந்து நிறைவேற்றி குடிநீர் தட்டுபாட்டை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News