சித்தாமூர் அருகே 3000 மரக்கன்றுகள் நடும் விழா
சித்தாமூர் அருகே 3000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 4 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக செய்யூர் வட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட இந்தளூர் பகுதியில் 3000 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடுவிழா மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்க தலைவர் பக்தவச்சலம் இந்தளூர் ஓய்வு பெற்ற மின் பொறியாளர் நடராஜன் ஆகியோர் முதல் கன்றை நடவுசெய்து துவங்கி வைத்தனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் 3,25,000 மரங்கள் நடப்பட்டுள்ளது காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதில் நல்ல வருமானம் தரக்கூடிய மரம் சார்ந்த விவசாய முறையை காவேரி கூக்குரல் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.
அதன்படி தேக்கு,செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வருகிறார்கள். ஏக்கருக்கு 260 முதல் 300 மரங்கள் வரை நடலாம். மற்ற பயிர்களுடன் மரம் நடவிரும்பினால்,
வேலி ஓரங்களில் மட்டும் 80 முதல் 120 மரங்கள் வரை நடவு செய்யலாம்.ஈஷா கடந்த 26 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி இதை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களில் மரங்களை நடவு செய்து வருகிறது. தற்போது வரை ஈஷாவின் அடுத்தடுத்த திட்டங்கள் மூலம் 10.9 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. விவசாயிகள் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் காவேரி கூக்குரல் இலவசமாக வழங்கி வருகிறது.
மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற காவேரி கூக்குரல் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இயற்கை ஆர்வலர்கள் வரதராஜன் ஏஜியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செங்கல்பட்டு ஈஷா ஒருங்கிணைப்பாளர் வீரமணி செய்திருந்தார்.