தமிழ்நாட்டை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார்:ஸ்ரீதர் வாண்டையார்

மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தஞ்சையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.;

Update: 2024-04-08 13:59 GMT

தமிழ்நாட்டை பிரதமர் மோடி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறக்கணிக்கிறார் என மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் தெரிவித்தார்.  தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் திமுக வேட்பாளர் ச. முரசொலிக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: காவிரி நீர் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் நிறைய பேர் மோட்டார் பம்ப்செட் வைத்திருந்தாலும், இன்னும் 40 விழுக்காடு விவசாயிகள் ஆற்றுப் பாசனத்தை நம்பியே உள்ளனர்.  இவர்களுக்கு காவிரி நீர் கிடைக்காததால் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். கல்விக் கடனைப் பெற்ற மாணவர்களும் திரும்பச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனையும், மாணவர்களின் கல்விக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகளும், மாணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 

Advertisement

ஆனால், ஒன்றிய அரசு இக்கடனைகளைத் தள்ளுபடி செய்ய மறுத்து, கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ரூ. 68 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் திமுகவுக்கு ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது.  சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் பெரு மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால், ஒன்றிய அரசு நிவாரணம் கொடுக்க மறுத்துவிட்டது. பிரதமர் மோடி தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல் புறக்கணிக்கும் விதமாக ஆட்சி செய்து வருகிறார்.  எனவே, இத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். தமிழக முதல்வரும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார். எனவே, தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலியை குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார் ஸ்ரீதர் வாண்டையார். அப்போது, தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News