பாமக வேட்பாளர் வாகனத்தை நிறுத்தி நன்றி தெரிவித்த முதியவர்
பாபநாசம் ஒன்றியத்தில் வாக்கு சேகரிக்க சென்ற பாமக வேட்பாளர் வாகனத்தை நிறுத்தி தனது மகளின் திருமணத்தை நடத்திவைத்ததற்கு முதியவர் ஒருவர் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்தார்.;
நன்றி தெரிவித்த முதியவர்
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கபிஸ்தலம் அருகே தென்செருக்கை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது துரைசாமி என்பவர் வேட்பாளர் ஸ்டாலின் வாகனத்தை தடுத்து நிறுத்தி கடந்த ஆண்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 85 வந்து பிறந்த நாளை முன்னிட்டு கட்டில் பீரோ சில்வர் பாத்திரங்கள் உட்பட சீர்வரிசை பொருளுடன் 90 ஜோடிகளுக்கு பிரம்மாண்ட திருமணம் செய்து வைத்ததில் தனது மகளும் பயனடைந்தார் என்று கூறினார்.
மேலும் நாங்கள் இறந்து போகும் வரை உங்களுக்கும் உங்களை சார்ந்தோருக்கு தான் எங்களது வாக்கு என்றும் வெற்றி நமக்கே என உணர்ச்சி ததும்ப துள்ளி குதித்து வேட்பாளரை வரவேற்று அவரது மகள் மற்றும் மகனின் திருமண போட்டோவை வேகமாக எடுத்து வந்து வேட்பாளரிடம் காட்டி நன்றி தெரிவித்த நெகிழ்ச்சியான சம்பவம் வேட்பாளரை மட்டுமின்றி கூட்டணி கட்சியினரையும் ஆச்சரியப்படுத்தியது.