போக்சோ - கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Update: 2024-02-28 01:33 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள கோவிலடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சங்கர் (39). திருமணமான இவருக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு இச்சிறுமியிடம் சங்கர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்ப வைத்து, பாலியல் வல்லுறவு செய்தார். இது குறித்து தோகூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் செய்தார்.
இதையடுத்து, திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜ் விசாரித்து சங்கருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.