கொலை வழக்கு - ஊராட்சி மன்ற துணை தலைவரின் கணவர் கைது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உறவினரை கொலை செய்த ஊராட்சி மன்ற துணை தலைவரின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் , சிவகாசி அருகே ஆணையூர் ஊராட்சி துணை தலைவாரக இருப்பவர் முத்துமாரி. இவரது கணவர் தங்கபாண்டியன். முத்துமாரியின் சகோதரிக்கும் அவரது கணவரான சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த நவநீதிகிருஷ்ணன் மகன் கணேசன்(37) என்பவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இப்பிரச்சினையை பேசுவதற்காக முத்துமாரியும், அவரது கணவரும் சென்றனர். அங்கு ஏற்பட்ட வாக்குவாதம், தகராறாக மாறியதில் தங்கபாண்டியன், கணேசனை அரிவாளால் வெட்டினார். காயமடைந்த கணேசனை உறவினர்கள் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர், கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சிவகாசி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்த தங்கபாண்டியனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா, ஏ.டி.எஸ்.பி அசோகன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.