பாதையை மூடிய போலீசார் - பெற்றோர் வாக்குவாதம்

தளி காவல் நிலையதிற்கு பின்புறம் உள்ள பள்ளி மாணவிகள் பயன்படுத்தி வந்த பாதையை போலீசார் மூடியதால் பெற்றோர் திரண்டு வந்து போலீசாரிடம் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-01-04 01:09 GMT

 கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் மாணவியர் விடுதி ஆகியவை இயங்கி வருகிறது. இதன் அருகில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியர்கள் அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக அமைக்கப்பட்டிருந்த பாதை வழியாக பள்ளிக்கு சென்று வந்தனர். இந்த பாதையை மறைத்து கழிவறை கட்டப்பட்டதால், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் வழியாக புதிய பாதை உருவாக்கப்பட்டு அந்த வழியாக மாணவிகள் பள்ளிக்கு சென்று வந்தனர்.

அந்த வழியாக பள்ளிக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால் தளி காவல் நிலையம் பின்புறம் உள்ள ஒரு பாதையை பயன்படுத்தி மாணவிகள் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்த பாதையை மாணவிகள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர். இந்த பாதையில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக வந்த புகார்களை அடுத்து தளி காவல் நிலைய போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு மாணவிகள் செல்லும் இந்த பாதையை சிமெண்ட் கற்களை கொண்டு அடைத்து மூடினர்.

இதனால் இந்த வழியாக பள்ளிக்கு மாணவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் 500 மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் தங்களது பிள்ளைகள் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல பாதையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என போலீசாரிடம் முறையிட்டனர்.

இதனையடுத்து தளி துணை காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார் மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் முடிவில் கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி காவல் நிலையம் அருகே உள்ள காம்பவுண்ட் சுவரை உடைத்து பள்ளிக்கு செல்ல புதிய பாதையை ஏற்படுத்தி தருவதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News