பாஜக நிர்வாகி வீட்டில் போலீசார் சோதனை - வாக்குவாதம்,பரபரப்பு
சேலம் பாஜக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு பின் போலீசார் சோதனை நடத்தியதால் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருப்பவர் சுரேஷ்பாபு. குரங்குச்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்து இருப்பதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில் வருமான வரித்துறை கூடுதல் உதவி இயக்குனர் வேணுகோபால் ரெட்டி தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் சுரேஷ்பாபு வீட்டுக்கு வந்தனர். சுரேஷ்பாபு வீட்டில் இல்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டு அதிகாரிகள் பேசினர். அவர் வீட்டுக்கு விரைந்து வந்தார்.
அதன்பிறகு அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறி விட்டு அதிகாரிகள் சென்றனர். இதற்கிடையே நேற்று மாலை சூரமங்கலம் உதவி போலீஸ் கமிஷனர்கள் நிலவழகன், ராமமூர்த்தி தலைமையில் போலீசார் சுரேஷ்பாபு வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு சுரேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி விட்டனர். நீங்கள் ஏன் சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், எங்களிடம் கோர்ட்டு அனுமதி இருக்கிறது என்று கூறி விட்டு சோதனையிட வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த அருள் எம்.எல்.ஏ. மற்றும் பா.ம.க., பா.ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சுரேஷ்பாபு வீட்டுக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு திரண்டு இருந்த பா.ஜனதா கூட்டணி கட்சியினர், அரசியல் உள்நோக்கத்துடன் சோதனை நடத்தப்படுகிறது என்றும், பா.ம.க. வேட்பாளர் பிரசாரத்தை முடக்க முயற்சி நடக்கிறது என்றும் குற்றம் சாட்டி கோஷங்கள் எழுப்பினர். இரவு 9 மணி அளவில் துணை கமிஷனர் பிருந்தா வந்து சுரேஷ்பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமார் 30 நிமிட பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தாசில்தார் மாதேஸ்வரன் முன்னிலையில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 10.30 மணி வரை நடந்தது. சோதனை முடிவில் பணம் ஒன்றும் சிக்கவில்லை என்று கூறிவிட்டு அதிகாரிகளும், போலீசாரும் அங்கிருந்து சென்றனர். அதன் பிறகு பா.ஜனதா தொண்டர்களும் கூட்டணி கட்சியினரும் கலைந்து சென்றனர்.