போலியோ சொட்டு மருந்து முகாம் - ஆட்சியர், எம்.பி துவக்கி வைப்பு

இராசிபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் உமா, மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார் ஆகியோர், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.

Update: 2024-03-03 06:57 GMT

இராசிபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. உமா, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்  இராஜேஸ்குமார் ஆகியோர், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.

நாமக்கல் மாவட்டத்தில் 1,15,600 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் வகையில் சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று(3.3.24) நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஸ்குமார் ஆகியோர், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இதேபோல் பல்வேறு பகுதியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.

இந்தியாவில் 2011-ம் ஆண்டு இறுதியாக போலியோ நோய் பதிவு செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் 2014-ம் போலியோ இல்லாத இந்தியா என சான்று அளித்தது. எனினும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ தொற்று இன்று வரை இருப்பதினால், வருடத்திற்கு ஒருமுறையாவது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1170 முகாம்களும் நகராட்சி பகுதியில் 208 முகாம்களும், மொத்தம் 1378 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, தன்னார்வ சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4418 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா அரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 27 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 42 வாகனங்கள் பயன முகாம்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர்  ஆர். கவிதா சங்கர், ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே. பி. ஜெகநாதன், ராசிபுரம் திமுக நகர செயலாளர் என் .ஆர். சங்கர், மேலும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கே. பூங்கொடி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன், ராசிபுரம் நகராட்சி நகர மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News