முத்தூர் அங்கன்வாடி மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி
முத்தூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
முத்துர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என 1154 மையங்களில் நடைபெறும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன் ஒரு பகுதியாக முத்தூர் அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதேபோல் திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற முகாமில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டொர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கினர்.