தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவு நிறைவு
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் வாக்குகளை செலுத்தினர்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தொகுதிகளில் உள்ள 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக கடந்த 5 மற்றும் 6-ஆம் தேதி களில் அவரவர் வீடுகளுக்கே சென்று தபால் மூலம் வாக்குப் பதிவை தேர்தல் அலுவர்கள் பெற்றுக்கொண்டனர்.
அதன்படி தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்குட்பட்ட 1,607 முதியவர்கள் விருப்பப் படிவங்கள் பெற்றதில், 1,548 பேர் தபால் மூலம் வாக்களித்தனர். அதேபோல் 839 மாற்றுத்திறனாளிகள் விருப்பப் படிவங்கள் பெற்றதில் 813 பேர் வாக்களித்தனர். இதையடுத்து தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், காவல்துறையினர் அஞ்சல் வாக்குப் பதிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது.
திங்கள்கிழமை வரை 2,639 அரசு பணியாளர்களும், 1,328 காவல்துறையினர், 54 ராணுவத்தினரும் தபால் மூலம் வாக்குகளை செலுத்தினர். தபால் வாக்குப்பதிவுகளை விடுபட்ட அரசு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை செலுத்தினர். இந்நிலையில் மாலை 5 மணியுடன் தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.