மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்கள் ஒத்திவைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதால் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்கள் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மகளிர்திட்ட கணக்கெடுப்பாளர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு கிராமங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று மாற்றுத்திறனாளிகளின் தரவுகளை திறன்பேசி மூலமாக பதிவு செய்யும் பணிகள் மகளிர்திட்ட களப்பணியாளர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை விவரம் ஆதார் அட்டை,குடும்ப அட்டை, வங்கி கணக்கு, கல்வி பணி நிலவரம் மற்றும் அரசு உதவிகள் கோருவது குறித்த விவரங்கள் கொண்ட தரவுகள் பெற்று திறன்பேசி மூலமாக பிரத்யே செயலி மூலமாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் தரவுகள் கணக்கெடுப்பு பணிகளில் புதிய அட்டை பெறுவது UDID எனும் ஸ்மார்ட் கார்டு பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் தரவுகள் சேகரிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களில் கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும் அடையாள அட்டை பெறாதவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள வட்டார அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணிகள் முடியும் வரையில் வியாழக்கிழமைகள் தோறும் நடைபெற்று வந்த மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள வட்டார மகளிர் அலுவலகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், வியாழக்கிழமைகள் தோறும் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம்கள் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறாது, பிப்பரவரி மாதம் 2024 முதல் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தெரிவித்துள்ளார்.