மண் எடுக்க அனுமதி கோரி மண்பாண்ட தொழிலாளா்கள் மனு
பட்டா நிலத்தில் மண் எடுக்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என செங்கல் சூளை மற்றும் மண்பாண்ட தொழிலாளா்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
Update: 2024-02-29 05:12 GMT
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், செங்கல் சூளை மற்றும் மண்பாண்ட தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவின் விவரம்: துறையூா் வட்டத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் செங்கல் சூளை மற்றும் மண்பாண்ட உற்பத்தியை குடிசைத் தொழிலாகச் செய்து வருகிறோம். எங்களது தொழில் பயன்பாட்டுக்கு பட்டா நிலத்திலிருந்து செம்மண், வண்டல் மண்ணை எடுத்து வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பட்டா நிலத்திலிருந்து மண் எடுக்க சிறப்பு அனுமதி அல்லது தற்காலிக அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.