சேலம்: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

சேலம் அம்மாப்பேட்டையில் பிளக்ஸ்' பேனரை அகற்றிய போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.;

Update: 2024-05-17 05:20 GMT

மின்சாரம் தாக்கி பலி

சேலம் அம்மாபேட்டை சவுண்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்த்தனாரி (வயது69). இவர் வீட்டின் முன்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். தந்தைக்கு உதவியாக அவருடைய மகன் தண்டபாணி (40) கடையில் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே வீட்டின் மொட்டை மாடியில் மளிகை கடையின் பெயர் அடங்கிய விளம்பர பிளக்ஸ் பேனர் கிழிந்திருந்தது. இதனால் புதிய பேனர் தயார் செய்யப்பட்டது.

நேற்று பிற்பகல் பழைய பேனரை அகற்றும் பணியில் அர்த்தனாரி மற்றும் தண்டபாணி ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற மின்சார ஒயரில் உரசியது. இதில் அர்த்தனாரி மற்றும் தண்டபாணி ஆகியோர் மின்சாரம் தாக்கி வீசப்பட்டு உடல் கருகினர். சம்பவ இடத்திலேயே தண்டபாணி பரிதாபமாக இறந்தார். அர்த்தனாரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இறந்த தண்டபாணியின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் பின்னர் தண்டபாணியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News