வந்தவாசி மாணவர்களுக்கு செயல் விளக்கம்
திருவண்ணாமலை மாவட்டம்:- இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியைநாளை கொண்டாட இருக்கும் நிலையில்,அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினரால் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வந்தவாசி தீயணைப்பு துறையினர் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று தலைமை ஆசிரியை கண்ணகி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை ரஷீனா முன்னிலை வகித்தார்.
வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் மு. பிரபாகரன் கலந்து கொண்டு தீபாவளி அன்று பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும் என்பது பற்றியும், பட்டாசுகளை குழந்தைகள் தனியாக வெடிக்காமல் பெற்றோர் துணையுடன் பாதுகாப்பாக வெடிக்கவும் அறிவுறுத்தினார். மேலும் திறந்த வெளிப்பகுதிகளில் மட்டுமே பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும், அருகில் தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிகள் வைத்திருக்க வேண்டும்.
நீண்ட குச்சி கொண்ட ஊதுவத்திகளை வைத்திருக்க வேண்டும். என்று சொல்லி, பட்டாசு மாதிரிகளை கையில் பிடித்து, அது வெடிக்கும் தன்மைகளை மாணவர்களிடம் விளக்கினார். குறிப்பாக, சின்ன குழந்தைகளான நீங்கள் பட்டாசு வெடிக்கும் போது, காட்டன் துணிகளை அணிந்து கொள்ள வேண்டும். மேலும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிர சுரங்களையும் வழங்கினர். நிகழ்ச்சியில், தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் சங்கர், வீரர்கள் விஜயபாஸ்கர், பிரசாந்த், அருண்குமார் சிவசங்கரன், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.