மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அச்சகத் தொழில் பயிற்சி

சிவாகாசியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான அச்சகத் தொழில் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-14 14:12 GMT

விருதுநகர் மாவட்டம், சிவகாசி இன்ஸ்டிட்யூட் ஆப் பிரிண்டிங் டெக்னாலஜி கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், பிரதான் நிறுவனம் மற்றும் சிவகாசி இன்ஸ்டிட்யூட் ஆப் பிரிண்டிங் டெக்னாலஜி இணைந்து நடத்திய 60 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான அச்சகத் தொழில் குறித்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில்: விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறம், நகர்புறத்தை சேர்ந்த ஏறத்தாழ 1.50 இலட்சம் பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக இருக்கிறார்கள். இதில் 10 முதல் 15 சதவிகித பெண்கள் மட்டுமே சுய தொழில் புரிபவர்களாக உள்ளனர். அதன்படி, பிரிண்டிங் தொழில்களை அடிப்படையாக கொண்ட இந்த பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்த வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பெண்கள் முன்னேற்றம் அடைவதற்கு அவர்கள் படிக்க வேண்டும். படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும். பெரும்பாலும் குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக முறையான வேலைக்கு செல்வது என்பது படித்து முடித்த பெண்களுக்கு கூட ஒரு சவாலாக இருக்கிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று தனியாக ஒரு தொழில் தொடங்கி அதற்குரிய பயிற்சியை மேற்கொண்டு, தொழில்புரிவதற்கு புதிய தொழில் சார்ந்த வாய்ப்புகள் நிறைய உள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மனிதர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருகிறது. வீட்டில் சமைப்பதை காட்டிலும், உணவு தயாரிப்பவர்களிடமிருந்து வீட்டிற்கே உணவுகளை பெற்று உண்ணும் பழக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதில் மிகப்பெரிய சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு ஏற்ப சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் காரணத்தினாலும், சமைப்பதினால் ஆகும் செலவை விட, சந்தையில் உள்ள உணவின் செலவு குறைவாக இருப்பதாலும், எளிதாகவும், விரைவாகவும், சமைக்க மற்றும் உண்ணக்கூடிய உணவுப்பொருட்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மேலும், தற்போது இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் வருவதை தடுப்பதற்கு சிறுதானிய உணவை உட்கொள்ளுவது அவசியமாக இருக்கின்ற காரணத்தினால் சிறுதானிய உணவுப் பொருட்களின் தேவையும் உள்ளது. இந்திய அளவில் நமது சிவகாசி பகுதிகளுக்கே உரிய தொழில்களான பட்டாசு, அச்சு தொழில்கள் முதன்மையாக இருக்கிறது. அதில் உள்ள வாய்ப்புகளை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது பல்வேறு துறைகளில் ஆண்களை விட பெண்கள் பல துறைகளில் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள்.

பெண்களுக்கான உண்மையான விடுதலை என்பது பெண்களின் கைகளில் பணம் இருக்க வேண்டும். அந்த பணத்தை தங்களுடைய நலத்திற்காக, குடும்ப நலத்திற்காக செலவிடுவதற்கான முழு உரிமை இருக்க வேண்டும் என்பதுதான். பணத்தை நாம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் மகளிர் சுய உதவிக்குழு போன்ற அமைப்புகள் பெண்களுக்கு பல்வேறு தொழில்களை தொடங்குவதற்கு தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இது போன்று பெண்களுக்கு நிறைய தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை எப்படி செயல்படுத்துவது என்பதை கற்றுக் கொண்டு, தனியாகவோ, குழுவாகவோ இணைந்து தொழில் புரிந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News