கோயில் இடத்தில் தனியாருக்கு பட்டா: கிராம மக்கள் எதிர்ப்பு
கோயில் இடத்தில் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருமயம் தாலுக்கா நெடுங்குடியில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே உள்ள இடத்தில் திருவிழா காலங்களில் அன்னதானம், வானவேடிக்கை போன்றவை நடத்தப்படும் இந்த இடத்தை வருவாய்த்துறையினர் தனிநபருக்கு சுமார் ஐந்து ஏக்கர் பட்டா வழங்கியுள்ளனர்.
இதை எடுத்த அந்த நபர் இடத்தை அளவீடு செய்து முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதை அறிந்து நெடுங்குடி கைலாசபுரம், கீழாநெல்லி கோட்டை, புதுப்பட்டி, கல்லூர், பொதுநிலை மேல்நிலைவயல், நல்லம்மாள் சமுத்திரம், ராயவரம் உள்பட 21 கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 350 பேர் ஊராட்சி தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் திரண்டு வந்து காரைக்குடி கீழாநெல்லி கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் கே புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆர்டிஓ முருகேசன் மற்றும் வருவாய் அலுவலர்கள் வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த இடம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாலும் பட்டா வழங்கும் 30 ஆண்டுகளானாலும் கோயிலுக்கு சொந்தமான புதுக்கோட்டை தேவஸ்தான ஆவணங்களை ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பித்து மேல்முறையீடு செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் கூறினர் இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.