கடற்கரை சாலை விரிவாக்க பணியால் சிக்கல்

கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட உள்ள கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு புதிய இடம் தேர்வு செய்து கட்டிடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-23 03:20 GMT

கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 1962ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. கோட்டைக்காடு, வேம்பனுார் போன்ற பகுதியில் வசிக்கும், 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் இங்கு படித்து வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, பள்ளி வளாகம் முழுதும் கையகப்படுத்த அளவீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பள்ளி கட்டடம் முழுதும் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.ஆகையால், பள்ளியை அருகே உள்ள மற்ற பள்ளியுடன் இணைக்க வேண்டும் அல்லது மாற்று இடம் தேர்வு செய்து புதிய பள்ளி கட்டடம் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த தயாசெந்தில் என்பவர் கூறியதாவது: கோட்டைக்காடு பகுதி யில், இந்த பள்ளி 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, தற்போது பள்ளி முழுதும் அகற்றப்பட உள்ளது. ஆகையால், பள்ளியை 2 கி.மீ., தொலைவில் உள்ள வெண்ணாங்குப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியுடன் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தினசரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக, குழந்தைகள் பள்ளி செல்வது சாத்தியம் இல்லாத ஒன்று. பள்ளிகளை இணைத்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் மாற்று இடம் தேர்வு செய்து, உடனே புதிய பள்ளி கட்டடம் அமைக்க வேண்டும் அல்லது தனியார் கட்டடத்திற்கு பள்ளியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோட்டைக்காடு பள்ளியை வெண்ணாங்குப்பட்டு பள்ளியுடன் இணைப்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பள்ளி கட்டடம் அகற்றப்படுவதற்கு முன் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்காக, பள்ளிக்கல்வித்துறை வாயிலாக மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News