சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம் !
சீத்தாவரம் நீர்நிலைப் பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு வருகின்றன.
By : King 24x7 Angel
Update: 2024-03-13 10:02 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சியில் அரும்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம், பேரணக்காவூர் ஆகிய கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. இப்பகுதி ஊராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள் மற்றும் ஏரி, குளம், கால்வாய் கரை போன்ற பகுதிகளில் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதராக காட்சியளிக்கின்றன. இதனால், அம்மரங்கள் வளர்ந்துள்ள நீர்நிலைகள் மற்றும் பொது இடங்கள் முட்புதராகவும், பயன்பாடு இல்லாத நிலங்களாகவும் இருந்து வருகின்றன. இந்நிலையில், சீமை கருவேல மரங்களை அகற்ற ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி, அரும்புலியூர் ஊராட்சியில் பொது இடங்களில் இடையூறாக உள்ள அம்மரங்களை அகற்ற ஊராட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக சீத்தாவரம் தாங்கல் கரை மற்றும் அப்பகுதி பொதுக்குளக்கரையில் உள்ள சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, அரும்புலியூர் ஊராட்சி தலைவர் வெங்கட்ராமன் கூறியதாவது: சீத்தாவரம் நீர்நிலைப் பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு வருகின்றன. அந்த இடங்களில் பனை, புளியன், வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்து ஊராட்சி சார்பில் பராமரிக்க தீர்மானித்துள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.