மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்

நெருப்பூர் முதல் பென்னாகரம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் செய்து மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது

Update: 2024-06-21 09:40 GMT

தருமபுரி மாவட்டம்,பென்னாகரம் வட்டம், நெருப்பூர் பகுதியில் ஏமனூர், சிங்காபுரம், அரக்காசன அள்ளி பஞ்சாயத்து, மற்றும் எர்ரப்பட்டி, தாசர்குந்தி ஆகிய பகுதிகளில் பல்லாண்டு காலம் வீடுகள் கட்டி, வேளாண்மை செய்து வரும் விவசாயிகளை வனத்துறையினர் நில வெளியேற்றம் செய்ய முயன்று வருகின்றனர். காவிரி முழவடை பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்வதை தடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஒகேனக்கல்லில் மீனவர்கள் குடியிருப்பு வனத்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.பிக்கிலி, மலையூர், ஏரிமலை உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் மேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் பெரியதும் பாதிக்கப்படுகின்றனர்.ஏமனூர், சிங்காபுரம், எர்ரப்பட்டி, தாசர்குந்தி உள்ளிட்ட பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் பல்லாண்டு காலம் குடியிருந்து வரும் விவசாயிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவும், நிலப்பட்டாவும் வழங்க வேண்டும். ஏமனூர் முதல் ஓட்டனூர் வரை காவிரி முழவடை பகுதியில் விவசாயிகளை நில வெளியேற்றம் செய்வதைக் கைவிட வேண்டும். வனப் பகுதியில் கால்நடைகள் மேய்ப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைக் கைவிட வேண்டும்.

கால்நடைகள் மேய்ச்சலுக்கு பட்டி பாஸ் வழங்கவேண்டும்.பழங்குடி மக்களுக்கு வீடு, குடிநீர், தெருவிளக்கு, சுடுகாடு, சுடுகாட்டுப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். தாட்கோ, கூட்டுறவு கடனுதவி வழங்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் நடைபெற்றது. நெருப்பூரில் தொடங்கிய நடைபயணம் ஏரியூர் மூங்கில்மடுவு வழியாக பென்னாகரம் வந்தடைந்தது.

நடைபயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை வகித்தார். ஏரியூர் ஒன்றிய செயலாளர் என்.பி.முருகன் முன்னிலை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். பென்னாகரம் நகர செயலாளர் ஆர்.வெங்கடாச்சலம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News