பிஏபி பாசன விவசாயிகள் போராட்டம் 

காங்கேயம் வீரணம்பாளையம் அருகே பிஏபி பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-18 00:55 GMT

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த பல மாதங்களாக சாலை அகலப்படுத்தும் பணி தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் நடைபெற்று வருகிறது. 

காங்கேயம் முதல் வெள்ளகோவில் வரை உள்ள சாலையின் குறுக்கே சுமார் 14 இடங்களில் ஏற்கனவே வடக்கு தெற்காக சாலையின் கீழ் பிஏபி கால்வாய்கள் இராட்சத குழாய்களினால்  இணைக் கப்பட்டுள்ளது. இந்த பிஏபி பாசன கால்வாய்களின் மூலம் பல்லாயிரம் கணக்கான ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பயனடைந்து வருகிறது.  இந்த நிலையில் காங்கேயம் அடுத்த வீரணம்பாளையம், பச்சாபாளையம், வெள்ளகோவில் குருக்கத்தி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தரைப் பாலங்கள் பொறியாளரின் கவனக்குறைவால் சரியான அளவீடுகள் செய்யப்படாமல் கால்வாய்களின் தண்ணீரை அடைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே பிஏபி விவசாயிகள் நெடுஞ்சாலை துறைக்கும், நீர்வளத் துறைக்கும், பொதுப்பணித் துறைக்கும் இந்த தரைப்பாலத்தை மாற்றி அமைக்க கடந்த ஒரு வார காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ஆனால் அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.   வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் பகுதிக்குட்பட்ட பிஏபி பாசன விவசாயிகள் சுமார் 200 பேர் ஒன்றுகூடி கோவை திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் வீரணம்பாளையம் கிராமம் அருகே  தற்போது கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் சரியான நேர்கோட்டில் இல்லை எனவும், தற்போது கட்டும் பாலமானது சீராக தண்ணீர் செல்ல வழி வகை இல்லையென்றும், இதை இடித்து நேர்கோட்டில் பாலத்தை கட்ட வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய், காங்கேயம்- வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் போராட்டத்தை துவங்கினர். இதனை தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட போலிஷார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

 எனவே காங்கேயம் வெள்ளகோவில் சாலையில் பரபரப்பு நிலவியது. மேலும் போராட்டத்திற்கு முறையான தீர்வு  கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கு தேசிய நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் கணேஷமூர்த்தி, உதவி பொறியாளர் சத்தியபிரபா மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்கர், காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலையிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் பிஏபி கிளை வாய்க்கால் செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள இராட்சத குழாய்களை அகற்றி இருபுறமும் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து தடையின்றி பிஏபி கால்வாய்க்கு தண்ணீர் செல்ல ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்து தருவதாக அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.   இதனை தொடர்ந்து அதிகாரிகள் கொடுத்த ஒப்புதலின் பேரில் விவசாயிகள் அதனை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை அறவழியில் முடித்தனர்.

Tags:    

Similar News