தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை
அருமனையில் அடகு வைத்த நகையை திரும்ப கொடுக்காததால் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் , அருமனையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இங்கு ஏராளமான மக்கள் வைப்பு நிதி வைத்துள்ளதோடு நகை அடகும் வைத்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் நிதி நிறுவனம் திடீரென பூட்டப்பட்டது.இதனால் பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்.பின்னர் நிதி நிறுவனத்தை திறந்து சோதனை நடத்திய போது வைப்பு நிதி மற்றும் அடகு நகைகள் திருப்பிக் கொடுக்கப்படும் என நிதி நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் நான்கு மாதங்கள் முடிந்த பிறகும் நகைகளை திருப்பிக் கொடுக்காததால் இன்று நிதி நிறுவனம் முன்பு பொதுமக்கள் திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.