தனியார் இரும்பு ஆலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு !

சங்ககிரி அருகே தனியார் இரும்பு ஆலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

Update: 2024-04-27 12:00 GMT

பொதுமக்கள்

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளை சந்தித்து தங்கள் கிராமத்தில் அமைய உள்ள இரும்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு புகார் மனுவை அளித்தனர். அந்த மனுவில், கூடலூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

ஆனால் எங்கள் பகுதியில் தனியார் இரும்பு ஆலை அமைக்க சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வாறு ஆலை அமைக்கப்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். விவசாயம் அழியும் நிலை ஏற்படும்.

இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிவிடும். மேலும் ஆலை அமைய உள்ள பகுதியில் பள்ளி, அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, தற்போது இரும்பு ஆலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News