நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்களுடன் இராஜேஸ்குமார் எம்பி கலந்துரையாடல்

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வெளி மாநில மாணவ மாணவியர்களுடன் இராஜேஸ்குமார் எம்பி மாவட்ட ஆட்சியா் உமா கலந்துரையாடல்

Update: 2024-03-15 03:24 GMT
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் பேசுகையில்... தமிழக முதல்வர் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றார்கள். மேலும் கனியன், பூங்குன்றனார் அவர்களின் கூற்றுப்படி ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்பது போல உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் இனம், மதம், மொழி பாகுபாடின்றி அனைவரும் நமது உறவினர்கள் ஆவார்கள் என்பதை போற்றிடும் விதமாக, வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையிலும், பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களது அவசர காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு உறுதிபடுத்தப்பட்ட இரயில் பயணச் சீட்டு பெறுவதற்கான சிரமங்களை போக்கி பயணச் சீட்டை உறுதி செய்திட எனது அலுவலகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும், எந்த நாளிலும், எந்த உதவிக்கும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக மாணவர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி அக்குழுவின் மூலம் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கடந்த ஜனவரி மாதம் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இதே போன்று வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மகளிர் விடுதி அமைக்க கோரிக்கை வைத்தனர். உடனடியாக விடுதி அமைக்க எனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50.00 இலட்சம் நிதி வழங்கப்பட்டு, விடுதியில் மாணவியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் தான் நம் நாட்டின் எதிர்காலம். சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உங்கள் அறிவையும், திறமையையும் பயன்படுத்த வேண்டும். நீங்கள் நல்ல முறையில் மருத்துவம் பயின்று ஏழை எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கி தாங்கள் சார்ந்த மாநிலத்திற்கும், பயின்ற கல்வி நிறுவனத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அவர் பேசினார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இராஜஸ்தானை சேர்ந்த 22 மாணவ, மாணவியர்கள், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 7 மாணவ, மாணவியர்கள், கேரளாவை சேர்ந்த 9 மாணவ, மாணவியர்கள், ஹரியானாவை சேர்ந்த 4 மாணவ, மாணவியர்கள், டெல்லியை சேர்ந்த 2 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 45 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றார்கள். மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளுடன் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News