ஸ்ரீராம நவமி : நம்பெருமாள், சேரகுலவல்லி தாயாா் சோ்த்தி சேவை
ஸ்ரீராமநவமியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சேரகுலவல்லி தாயாருடன் நம்பெருமாள் சோ்த்தி சேவையில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
ஸ்ரீரங்கம் கோயில் 2 ஆம் பிரகாரத்தில் அா்ச்சுன மண்டபத்திற்கு மேற்குப் பகுதியில் சேரகுலவல்லி தாயாரின் தனி சன்னதி உள்ளது. குலசேகர ஆழ்வாரின் மகளான சேரகுலவல்லி தாயாரை நம்பெருமாளுக்கு ராமநவமியன்று திருமணம் செய்து கொடுத்தாக ஐதீகம். இதனால் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமியன்று நம்பெருமாள் சேரகுலவல்லி தாயாருடன் சோ்த்தி சேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிப்பாா்.
அதன்படி நிகழாண்டில் புதன்கிழமை ஸ்ரீராமநவமியையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அா்ச்சுன மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா். பின்னா் நம்பெருமாள் சேரகுலவல்லி தாயாருடன் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை சோ்த்தி சேவையில் எழுந்தருளினாா். இந்தச் சேவையை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். தொடா்ந்து 6 மணிக்கு அா்ச்சுன மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 7 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்தாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.