ராமநாதபுரம் பெண் இறப்பு சந்தேகம் மாவட்ட ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் பெண் சாவில் சந்தேகம் போலீசார் விசாரணையில் மெத்தனம் என பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு கொலை வழக்காக பதிய வலியுறுத்தல்
Update: 2024-02-20 06:29 GMT
ராமநாதபுரம் சாயல்குடி பேரூராட்சி விவிஆர் நகரை சேர்ந்த அகஸ்டின் என்பவரின் மனைவி திருமணம் ஆகி 5 மாதத்திற்குள் இளம் பெண் திவ்யமேரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தமது மகளை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி கொலை செய்து தூக்கில் போட்டு விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் பெண்ணின் பெற்றோர் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விஷயத்தில் சாயல்குடி காவல் துறையினர் மிகவும் மெத்தனமாக செயல்பட்டதாகவும் கோட்டாட்சியர் கண் துடைப்பிற்காக மட்டுமே விசாரணை செய்து, பெற்றோர்களிடம் உரிய விசாரணை நடத்தாமல் விவரங்களை கேட்டு பெறாமல் தன்னிச்சையாக அவர்களை மிரட்டி கையெழுத்து வாங்கி விட்டதாக கண்ணீர் மல்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, சாயல்குடி போலீசார் அவசரகதியில் பிரேத பரிசோதனை நடத்தி உடலை புதைத்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், சாயல்குடி பேரூராட்சி வி.வி.ஆர் நகர் பாரதியார் தெருவை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரின் மகன் அகஸ்டினுக்கு எங்களது மகள் திவ்ய மேரியை 45 பவுன் நகையும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வரதட்சணையாக கொடுத்து மேலும் சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருள்களும் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தோம். திருமணமான முதல் மாதத்திலேயே எனக்கு கடன் இருக்கிறது என்று சொல்லி மகள் மூலமாக ரூபாய் 50,000 வாங்கி கொண்டதாகவும் மேலும், மகளின் கணவர், மாமியார் உள்ளிட்ட ஐந்து பேர் எங்களது மகளைத் தொடர்ந்து வரதட்சனை கேட்டு சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்தனர். என் மகளின் கணவரான அகஸ்டினுக்கு பிற பெண்களுடன் சவகாசமும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மது போன்ற கெட்ட பழக்கங்களும் அவருக்கு இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டுமனை வாங்க போகிறோம் உன்னுடைய நகையை தா.. உன் அம்மா வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா என கொடுமைப்படுத்தி அடித்து சித்திரவதை செய்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு விட்டார்கள் என மனுவில் கூறப்பட்டுள்ளது.