நாளை ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்! மிஸ் பண்ணீடாதீங்க....!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகாக்களில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கல், சேர்த்தல், மாற்றம் இவைகளை சரிபார்ப்பதற்கான குறை தீர்க்கும் முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான குறை தீர்க்கும் முகாம் நாளை (ஜூன் 15)சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நாளை சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 1)நாமக்கல், 2)இராசிபுரம், 3)மோகனூர், 4)சேந்தமங்கலம், 5)கொல்லிமலை, 6)திருச்செங்கோடு, 7)பரமத்தி வேலூர் மற்றும் 8)குமாரபாளையம், வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.