ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கல்: இருவர் கைது
தூத்துக்குடியில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கிய இருவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து 2 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Update: 2024-01-10 05:57 GMT
தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீசார், நடராஜபுரம் பகுதியில் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில், ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான ஒரு கிட்டங்கியில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கிக் கொண்டிருந்த தூத்துக்குடி கீழரத வீதியைச் சோ்ந்த ஹுசேன் கான் மகன் செய்து அப்துல் ஹரீம் (40), தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சோ்ந்த கந்தையா மகன் ராம்தேவன் (22) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், தூத்துக்குடி நடராஜபுரம், அழகேசபுரம் பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கோழித்தீவனத்துக்காக அதிக விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவா்களிடமிருந்து சுமாா் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள 50 மூட்டைகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரமேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனா்.