தோவாளை கால்வாயில் மீண்டும் உடைப்பு.
தோவாளை கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Update: 2023-12-26 04:51 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழையால் தோவாளை கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் உடைப்பு ஏற்படாமல் இருக்க அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிறுத்தினார். பின்னர் மழை நின்று வெயில் கொளுத்த தொடங்கியதும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கால்வாயில் அணையிலிருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் திடல் அருகே தூவச்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று காலை தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி உள்ளனர். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் உடைப்பு ஏற்பட்டது குறிப்பிட தகுந்ததாகும். இந்த நிலையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று இந்தப் பகுதிகளை திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ், உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என கூறினார்.