மேலூர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!
மேலூர் அருகே கண்மாயில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டு, போலீஸ் விசாரணை நடக்கிறது.
மேலூர் அருகே, அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்மாயில் இருந்து மீட்பு: கொலை செய்யப்பட்டவரின் தம்பி மனைவி உட்பட 5 பேர் கைது: உறவினர்கள் சாலை மறியல், கடையடைப்பு மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் தனியார் பால் பண்ணையில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 05ஆம் தேதி பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வந்தவர் வீடு திருப்பவில்லை.
இதுகுறித்து பாண்டியின் மனைவி சங்கீதா அளித்த புகாரின் பேரில் கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பாண்டியை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்லியன் ரெபோனி தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், பாண்டியின் தம்பியான வாஞ்சிநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், வாஞ்சிநாதனின் மனைவி ரூபதி உறவினரான நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இதனால், தம்பியின் பெயரில் உள்ள சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக பாண்டிக்கும், அவருடைய தம்பி மனைவி ரூபதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ரூபதி தனது இரண்டாவது கணவர் கார்த்திகேயனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாண்டியை காரில் கடத்திச் சென்று, நரசிங்கம்பட்டி பகுதியில் உள்ள மலை அருகே வைத்து கழுத்து, முதுகு, கை, மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து பாண்டியின் தலை மற்றும் கால்களை துண்டித்து விட்டு சாக்கு மூட்டையில் கற்கள் வைத்து பாண்டியின் உடலை அருகில் இருந்த சொழியப்பன் கண்மாயில் வீசி எறிந்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கம்பம் பகுதியில் தலைமறைவாக இருந்த கார்த்திகேயன், மற்றும் அவரது மனைவி ரூபதி உள்ளிட்ட 5 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும். அவர்கள் அளித்த தகவலின் பேரில், கொலை செய்யப்பட்ட பாண்டியின் உடலை, மேலூர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கண்மாயில் இருந்து மீட்ட காவல்துறையினர், பாண்டியின் உடலை உடற் கூராய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் கூறும்போது. இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பாண்டியின் உறவினர்கள், கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கோட்டநத்தாம்பட்டியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து கடைகளை அனைத்தும் அடைக்கப்பட்டது. மேலும் இந்த சாலை மறியலல் மேலூர் - சிவகங்கை மற்றும் வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டியின் உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்....