கோவில்களுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
தென்காசியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தது மீட்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ளன. அந்த நிலங்களுக்கு கட்டளைதாரர்கள், மாலைக்கட்டு வரிதாரர்கள் முறையாக கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் தகவல் தெரிவித்தும் கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர். ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், கட்டளை செய்யப்படாத கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர், இலத்தூர் மதுநாதசுவாமி, புளியரை கிருஷ்ணசாமி ஆகிய கோவிலுக்கு சொந்தமான கட்டளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 நபர்களிடம் இருந்து சுமார் 4 ஏக்கர் இடம் அளவீடு முடிந்து அறிவிப்பு பலகை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமையில் நிறுவப்பட்டது.
மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும். அப்போது சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ரத்தினவேலு, கோபாலகிருஷ்ணன், நவீன், தொழில்துட்ப உதவியாளர் பிரேம், தி.மு.க.கிளை செயலாளர் கிளாங்காடு ராமர், தங்கராஜ், நில அளவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.