சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள்
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது
By : King 24x7 Website
Update: 2023-12-06 06:37 GMT
சென்னையில் ‘மிக்ஜாம்' புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள், தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர நிவாரணப் பொருட்களும் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில், பாய், போர்வை, நைட்டி, நாப்கின்கள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் நேற்று நள்ளிரவு லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக இந்த நிவாரண பொருட்களை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன், மாநகர நல அலுவலர் யோகானந் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் நிவாரணப் பொருட்களை வழங்க விருப்பமுள்ளவர்கள் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில், அதற்குரிய பொறுப்பு அலுவலரிடம் வழங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.