ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பழநி மலையடிவாரத்தில் நகராட்சி சார்பில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பழநி அடிவாரத்தில் நகராட்சி சார்பில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வது தொடர்பாக மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக நேற்று பழநி அடிவாரத்தில் உள்ள சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதிகளில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஏராளமான கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொண்டனர். சாலையோர கடைகள் நகராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்தப்பட்டன. 300க்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டன. நகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். டவுன் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.