ரூ.5 கோடியில் சிவகங்கை தெப்பக்குளம் சீரமைப்பு
சிவகங்கை தெப்பக்குளம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் விரைவில் சீரமைக்கப்பட உள்ளது. மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட உள்ளது என நகராட்சி தலைவர் தெரிவித்தார்.
Update: 2023-12-29 05:19 GMT
சிவகங்கை தெப்பக்குளத்தில் பருவ மழை காலங்களில் பெய்யும் மழைநீர் வரத்து கால்வாய் வழியாக குளத்தை நிரப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை நகரில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தெப்பக்குளத்தின் மேற்கு பகுதி சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் வாரச்சந்தை செல்லும் ரோடு முழுவதும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இவற்றை நகராட்சித் தலைவர் துரைஆனந்த், நகராட்சி ஆணையாளர் வெங்கட லட்சுமணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். நகராட்சி பணியாளர்கள் மணல் மூட்டைகள் மூலம் சேதமடைந்த பகுதிகளை சரி செய்தனர். இது குறித்து நகராட்சி தலைவர் துரைஆனந்த் தெரிவிக்கையில், சிவகங்கை தெப்பக்குளம் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் விரைவில் சீரமைக்கப்பட உள்ளது. தெப்பக்குளத்தை சுற்றி நகர் மக்கள் பயனுள்ள வகையில் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட உள்ளது. ஆழ்துளை கிணறு மூலம் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பி தெப்பக்குளம் வற்றாமல் பராமரிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்