தூத்துக்குடி - சென்னை இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை

தூத்துக்குடி - சென்னை இடையே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2024-02-07 09:34 GMT

தூத்துக்குடி ரயில் நிலையம் 

தொழில் நகரான தூத்துக்குடி மாநகரில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் வணிகம், கல்வி, தொழில் தொடர்பாக தினசரி ஆயிரக்கணக் கணக்கானோர் சென்று வருகின்றனர். இதற்காக பேருந்து, ரயில், விமான போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். மேலும், தற்போது தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில், தென் மாவட்ட மக்கள் கிளாம்பாக்கத்துக்கு வந்து விட்டு, மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல கூடுதலாக 2 மணிநேரம் ஆகிவிடுவதால், மொத்த பயண நேரம் பலமணிநேரம் அதிகரித்து விடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனா். இதன் காரணமாக ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு நிரம்பி வழிகிறது. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துக் காெண்டே வருகிறது. தூத்துக்குடி - சென்னை இடையே ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால் முதியவர்கள், பெண்கள் உட்பட பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.  எனவே, தூத்துக்குடி - சென்னை இடையே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் சக்தி ஆர். முருகன் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News