பள்ளிப்பேட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்த கோரிக்கை
பள்ளிப்பேட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாயில் உள்ள குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் நிரம்பி உள்ளதால், கழிவுநீர் விரைந்து செல்ல முடியாமல், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிப்பேட்டை ஊராட்சி, புதுப்பேட்டை ஜி.எஸ்.டி., சாலை பகுதியில், கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவு நீர் கால்வாயில், பிளாஸ்டிக் குப்பை கழிவுகள், வீட்டு காய்கறி கழிவுகளை, அப்பகுதி மக்கள் கொட்டி வருகின்றனர்.
இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் விரைந்து செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் நிறைந்துள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், கழிவுநீர் கால்வாயில் உள்ள குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தி, கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.