பயணியர் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை
சங்ககிரி: பயணியர் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை....
Update: 2024-04-26 05:17 GMT
சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே பவானி, ஈரோடு, திருச்செங்கோடு, கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வந்தன. அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து ஸ்தமிப்பு ஏற்பட்டதையடுத்து காவல்துறை அப்பேருந்து நிறுத்தத்தை சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் வடக்குப்பகுதியில் செல்லும் பவானி பிரதான சாலையையொட்டி மாற்றம் செய்தனர். இப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு, பவானி, திருப்பூர், கோவை, செல்லும் பேருந்துகளும் திருச்செங்கோடு,வேலூர், பரமத்தி செல்லும் பேருந்துகள் நீதிபதிகள் குடியிருப்பிற்கு முன் பகுதியில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றனர். இரு இடங்களிலும் பயணிகள் நிழற்குடை இல்லாததால் கடந்த சில வாரங்களாக சேலம் மாவட்டத்தில் சராசரியாக 105 செல்சியஸ் டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்து வருவதால் வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பேருந்துகளுக்காக காத்திருப்பதால் பலர் மயக்கமடைந்து வருகின்றனர். அப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அரசு பேருந்துகளின் நேரம் காப்பாளர் அலுவலக இரும்பு பெட்டி வைத்துள்ளதால் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். எனவே சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு உள்ள தற்காலிக பேருந்தினை சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகேயும், நீதிபதிகள் குடியிருப்புகளுக்கு முன்பு உள்ள பேருந்து நிறுத்ததினை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக முன்பும் மாற்றம் செய்து அப்பகுதிகளில் தற்போது அதிகரித்து வெப்பத்தை கருத்தில் கொண்டு பயணிகள் நிழற்குடையும், பெண்கள்,மாணவிகளுக்கு நடமாடும் கழிவறை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருமாறு சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.