தேவனேரி பகுதியில் சாலையோர விளம்பர பலகைகளை அகற்ற கோரிக்கை

செங்கல்பட்டு தேவனேரி பகுதியில், விபத்துகளை தவிர்க்க சாலையோர விளம்பர பலகைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-05 06:13 GMT

செங்கல்பட்டு தேவனேரி பகுதியில், விபத்துகளை தவிர்க்க சாலையோர விளம்பர பலகைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு, பழைய மாமல்லபுரம் சாலைகள், இங்கு இணைகின்றன. தேவனேரி பகுதியில், உட்புற சாலை இணையும் சந்திப்புகள் உள்ளன. இந்த சந்திப்புகளில், வாகனங்கள் வேகமாகவும், தாறுமாறாகவும் கடப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், காவல் துறை, இப்பகுதியில் விபத்துகளை தவிர்ப்பதற்காக, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், இந்த சாலை வளைவு பகுதியில், பிரமாண்ட விளம்பர பலகைகள் அதிகரித்து வருகின்றன.

இப்பலகைகளால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, பெரும் விபத்துகள் நிகழ வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி, அந்த விளம்பர பலகைகள் காற்றில் சேதமடைந்து, சாலையில் விழும் நிலையிலும் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின், 2003ம் ஆண்டு அரசாணை எண்: 47; ஊராட்சிப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறையின், 2009ம் ஆண்டு அரசாணை எண் 41 ஆகியவற்றின்படி, உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய கட்டணம் செலுத்தி, முறையான அனுமதி பெற்றே, விளம்பர பலகைகள் அமைக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள், விபத்து அபாயம் உள்ள இடங்களை ஆய்வு செய்யாமல், பிரமாண்ட விளம்பர பலகைகள் அமைக்க அனுமதிக்கின்றனர். அனுமதி இன்றி, விதிகளை மீறி அமைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News