குமாரபாளையம் பாலத்தின் பக்கவாட்டு மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை
குமாரபாளையம் காவிரி பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மரங்கள் அப்புறப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பழைய காவேரி பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் வளரும் மரங்களை உடனே அப்புறப்படுத்தி, பாலத்தின் உறுதி தன்மையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமாரபாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே மூன்று பாலங்கள் உள்ளன.
இதில் பழைய காவேரி பாலம் எனப்படும் பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இது மிகவும் வலுவிழந்து உள்ளதால், இதில் கனரக வாகனங்கள் எதையும் பல ஆண்டுகளாக அனுமதிப்பது இல்லை. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருகிறது.
பாலத்தின் பக்கவாட்டு கைப்பிடி சுவற்றில் இரு பக்கமும் மரங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது மழைக்காலமாக இருப்பதால் இது மேலும் வளர துவங்கும். இதனால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும். எனவே, இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் வளரும் மரங்களை உடனே அப்புறப்படுத்தி, பாலத்தின் உறுதி தன்மையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.