அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் விபத்து அபாயம்!
அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் விபத்து அபாயம் : தூத்துக்குடியில் வாகன ஓட்டிகள் அச்சம்!
தூத்துக்குடியில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் சுவர்களில் கண்கவர் வண்ண ஓவியங்கள் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவ்வழியே செல்லும் வாகனங்களை அணுகு சாலை வழியாக செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், அணுகு சாலையின் ஓரத்தில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் பஸ் போன்ற வாகனங்கள் செல்லும் போது அப்பகுதி முழுவதும் தூசு மண்டலமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மற்ற வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் 108 ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே விபத்து எதுவும் நடக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்னர்.