கருங்குழி கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
கருங்குழி பெரிய பாளையத்தம்மன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குழி பேரூராட்சி 4வது வார்டில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் குளம் முழுதும், ஆகாய தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது. மேலும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது. கொசு உற்பத்தி தண்ணீர் இருப்பதே தெரியாத வகையில், ஆகாய தாமரை படர்ந்துள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது.
குளக்கரையை சுற்றி முட்புதர் வளர்ந்து, புதர் மண்டி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய பெரியபாளையத்தம்மன் கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி, குப்பை கொட்டும் பகுதியாக மாறி உள்ளதாக, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். மதுராந்தகம் -திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையோரம் குளம் உள்ளதால், குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் அமைத்து, நடைபாதை பூங்கா ஏற்படுத்தித் தர வேண்டும். குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, கழிவுகளை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.