வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களை மீட்டெடுக்க கோரிக்கை
வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களை தமிழக தொல்லியல் துறை மீட்டெடுக்க வேண்டும் என தமிழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளம்: வடபழஞ்சியில் அழியும் வரலாறு- தமிழக தொல்லியல் துறை மீட்டெடுக்க தமிழ் மாணவர்கள் கோரிக்கை மதுரை வடபழஞ்சி கிராமத்திற்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 200 ஆண்டுகள் பழமையான ஒரு கல் மண்டபம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.
நம்முடைய தொன்மையான வரலாறு அடையாளம் தெரியாமல் கிடப்பதாக மாணவர்கள் வேதனை. இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் வினோத் கூறியதாவது: வடபழஞ்சியில் பல்வேறு விதமான தொல் எச்சங்கள் காணப்படுகின்றன. அந்த எச்சங்களில் ஒன்றுதான் சிதைந்து போன இம் மண்டபம். இம்மண்டபமானது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பராமரிப்பின்றி காணப்பட்டது.
நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது பல இடர்பாடுகளைச் சந்தித்து தற்போது தரைமட்டமாக காட்சி தருகிறது. இம்மண்டபத்திற்கு முன்பு தற்காலத்தில் எழுப்பப்பட்ட விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. இம்மண்டபம் காணப்படுகின்ற பகுதியில் கற்றூண்களும், மேற்கூரைகற்களும் சிதறிக் கிடக்கின்றன. ஒரு தூணில் சங்கு,சக்கரம் நடுவில் வைணவக் குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. எனவே இது வைணவத்தோடு தொடர்புடைய மண்டபமாக இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. இம் மண்டபம் இடையர் தர்மம் என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.
மேலும்,இம்மண்டமானது பயன்பாட்டில் இருந்த காலகட்டத்தில் வழிப்போக்கர்கள் தங்கும் இடமாகவும், சித்திரைத் திருவிழா காலங்களில் நீர், மோர் பந்தலாகச் செயல்பட்டதாகவும் அதற்கு பின் இம்மண்டபமானது உணவகமாகச் செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இம்மண்டபம் இருக்கின்ற நிலத்தின் உரிமையாளருக்கு வாரிசு இல்லாத காரணத்தினால் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது என்ற தகவலும் உள்ளது. இம்மண்டபப் பகுதியில் ஒரு சதுர வடிவ கிணறும் , சில உரல்களும் காணப்படுகின்றன. கல்வெட்டு,சிற்பங்கள் போன்ற எவையும் காணப்படவில்லை. இது குறித்து கருத்துத் தெரிவித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்த போது வைணவ சமயத்தைப் பெரிதும் ஆதரித்தவர்கள் , மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள்.
இவ்வம்சத்தின் அரசியான ராணி மங்கம்மாள் காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் கி.பி. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறிச் செல்ல பல சத்திரங்கள் வைணவக் குறியீடுகளுடன் கட்டப்பட்டன. இது போன்ற மங்கம்மாள் சத்திரங்கள் மதுரை விருதுநகர் மாவட்டப் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. அதை ஒட்டி இந்த சிதைந்து போன மண்டபமும் ராணி மங்கம்மாள் காலத்தில் ஒரு சத்திரமாகச் செயல்பட்டு இருக்கலாம் என்று கருத முடிகிறது. இத்தகைய பழமையான மண்டபங்கள் பல இடங்களில் சிதிலமடைந்து கேட்பாரற்று கிடைக்கின்றன.
தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பல்வேறு விதமான ஆய்வுப் பணிகளைச் செய்து வரும் நிலையில் பழைமை தாங்கி நிற்கக் கூடிய இது போன்ற மண்டபங்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். வினோத் பல்கலைக்கழக தமிழ் மாணவரின் ஆய்வுப் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் முனைவர் சீ. வசந்தி அவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தான் மதுரை அவனியாபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் சிலையை கண்டுபிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேட்டி : த.வினோத் M.A.,D.TA.,D.HMT.,AE., மதுரை காமாஜர் பல்கலைக்கழகம், முதுகலை (தமிழ்த்துறை) மாணவர்