பேராவூரணி பெரியகுள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார கோரிக்கை

Update: 2023-12-11 18:20 GMT
ஆட்சியரிடம் மனு அளித்தனர்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி பெரியகுளம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பெரிய குளக்கரை திறந்தவெளி கழிப்படமாக மாறி வருவதையும், குப்பைக் கழிவுகளை கொட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம், பேராவூரணி கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில், நிறுவனர் நவீன் ஆனந்தன், மற்றும் பேராவூரணி கே.பி.செழியன், ஷாஜகான் ஆகியோர் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். 

.அந்த மனுவில் கூறியிருப்பதாவது,  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பேராவூரணி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி சுமார் 564 ஏக்கர் பரப்பளவு உள்ளதாகும். இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தனிநபர்கள் கையில் உள்ளது. சுமார் 5, 000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறக்கூடிய, பெரிய ஏரி தற்போது ஆக்கிரமிப்பால் சுருங்கி போய் உள்ளது.  எனவே, இதனை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி, பாசனத்திற்கு தகுந்த வகையில், பெரிய குளத்தை மீட்க வேண்டும். ஆக்கிரமிப்பு காரணமாக, இப்பகுதி நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது.  எனவே, ஆக்கிரமிப்பு அகற்றி ஏரியை தூர்வாரித் தர வேண்டும் என வலியுறுத்தி என பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சட்டப்பேரவை மனுக்கள் குழுவிடம் மனு  அளிக்கப்பட்டது.  இதையடுத்து, பெரியகுளம் ஓரளவு அளவீடு செய்யப்பட்டது. ஆனால் அளவீடு செய்யும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. ஐந்து மாதங்கள் கடந்தும், பல முயற்சிகள் மேற்கொண்டும், பல மனுக்கள் அளித்தும், அரசு அதிகாரிகள், தனிநபர் விருப்பத்திற்காக பேராவூரணி பெரிய குளத்தில் அளவீடு செய்ய முன் வரவில்லை. இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.  ஆகவே, பெரிய குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும்.   மேலும், பெரியகுளக்கரை தற்போது திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. இதன் காரணமாக சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், தனி நபர்கள் குப்பைகளை அந்த பகுதியில் கொண்டு வந்து கொட்டுவதும், மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை உடைத்துச் செல்வதுமாக உள்ளனர்.  எனவே, பெரியகுளத்தை தூய்மையாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News