கல்வி நிலையங்களில் உள்ள சமுதாயப் பெயர்களை நீக்க கோரிக்கை

கல்வி நிலையங்களில் உள்ள சமுதாயப் பெயர்களை நீக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் உரிமைக்கான கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-25 04:30 GMT

மதுரையில் உள்ள தனியார் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் உரிமைக்கான கூட்டமைப்பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் மராட்டியும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஓபிசி சமுதாயத்தினர் விழிப்புணர்வு பெற்று தங்களின் நிலைமையை புரிந்து தங்களை புறக்கணித்த மத்தியில் ஆட்சி புரிந்த பாஜக கட்சிக்கு அதிர்ச்சி தந்துள்ளனர்.

மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் ஓ பி சி சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்திய பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாருக்கு அங்கீகாரம் தந்து அவர் பங்களிப்பின்றி மத்திய அரசு பயணிக்க முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தி உள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கல்வி நிலையங்களில் ஜாதி சமய அடிப்படையில் ஏற்படும் வன்முறைகளை களைய கொடுத்த பல சிபாரிசுகள் அபத்தமானவையாக உள்ளது என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட உள்ளோம்.

மேலும் கல்வி நிலையங்களில் உள்ள சமுதாயப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிட நலப் பள்ளிகள் ஆகியவற்றின் பெயர்களை நீக்கி அரசு பள்ளிகள் என்ற பெயரில் இயங்க வேண்டும். தமிழக அரசு கல்வி நிலையங்களில் சமூக நீதி மாணவர் படை என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் நேர்மையான முறையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனே நடத்தி அந்த தரவுகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

புதிய பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத ஒன்பது சதவீத பணிகள் சுமார் 2.50லட்சம் அரசு பணிகளில் ஓபிசி சமுதாயத்தினரை அமர்த்திட வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள ஓபிசி சமுதாய மக்களையும் இணைத்திட வேண்டும்.மாநில கல்வி உதவித் தொகை உச்ச வரம்பை இரண்டு லட்சத்திலிருந்து 8 லட்சமாக உயர்த்திட வேண்டும். கல்விக் கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வன்கொடுமை தடுப்பு சட்டத்தை துஸ்பிரயோகம்  செய்தல் மற்றும் சமுதாய கலாச்சார அடையாளங்களை பறிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்வின் போது யாதவர் பேரமைப்பு நவநீதகிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி குமரவேல், வெள்ளியங்கிரி நாகரத்தினம் செல்ல பாண்டியன்,விஜயகுமார் சம்பத் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags:    

Similar News