அச்சிறுபாக்கம் அருகே பழுதடைந்துள்ள குடிநீர் டேங்கை சீரமைக்க கோரிக்கை
அச்சிறுபாக்கம் அருகே பழுதடைந்துள்ள குடிநீர் டேங்கை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், மோகல்வாடி ஊராட்சிக்குட்பட்ட எலப்பாக்கம்- - ராமாபுரம் மாநில நெடுஞ்சாலை ஓரம், மோகல்வாடி சுடுகாட்டு பாதை உள்ளது. அதன் அருகே, பொதுமக்கள் மற்றும் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் குடிநீர் தேவைக்காக, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் மினி டேங்க், ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு ஏற்படுத்தி, குடிநீர் வசதி செய்யப்பட்டது.
தற்போது, குடிநீர் மினி டேங்க் பயன்பாடு இன்றி, கடந்த ஒரு ஆண்டாக பழுதடைந்து, பராமரிப்பன்றி புதர்மண்டி உள்ளது. தற்போது, கோடை வெயில் அதிகமாக உள்ளது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதேபோன்று, மோகல்வாடி பேருந்து பயணியர் நிழற்குடை அருகே உள்ள குடிநீர் மினி டேங்க்கும் பழுதடைந்து, பயன்பாடின்றி உள்ளன.
எனவே, பழுதடைந்துள்ள குடிநீர் மினி டேங்கை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.