சாலையை சீரமைக்க கோரிக்கை
செங்கண்மால், ஓ.எம்.ஆர் சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் அடுத்த தையூர் ஏரி மற்றும் நிலப்பரப்பிலிருந்து வெளியேறும் மழைநீர் செங்கண்மால், ஓ.எம்.ஆர்., சாலையை கடந்து செல்கிறது. கடந்த மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பலத்த மழை பெய்ததால், மேற்கண்ட பகுதியில் சாலை மற்றும் தரைப்பாலத்தின் மீது, 4 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்போது சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி, மழைநீர் வெளியேற்றப்பட்டது. பின், பெரிய குழாய்கள் புதைத்து பள்ளம் மூடப்பட்டது. எனினும், அந்த இடத்தில் சேதமடைந்த சாலையை முறையாக சரிசெய்யவில்லை.
அதனால், அந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், திடீர் சாலை சேதத்தால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். அங்கு, சில நாட்களுக்கு முன், தனியார் பள்ளி வாகனம் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. எனவே, மேற்கண்ட பகுதியில் விபத்தை தடுக்க, சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.