பட்டுக்கோட்டையில் சாலையை சீரமைத்து தர கோரிக்கை
சிவக்கொல்லை பகுதியில் மண் சாலையை, சீரமைத்து தரக்கோரி போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி, 25 ஆவது வார்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம் நடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ரெ.ஞானசூரியன் கலந்து கொண்டு பேசினர். கிளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், "நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு, கடந்த 3 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை நகராட்சி 25 ஆவது வார்டு, சிவக்கொல்லை 4 ஆவது தெருவில் உள்ள மண்சாலை நீண்ட காலமாக பராமரிப்பின்றி, குண்டுங்குழியுமாக உள்ளது.
தற்போது மழை பெய்து வரும் சூழலில் சாலை சேறும் சகதியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் செடிகொடிகள் மண்டிக்கிடக்கிறது. இதன் காரணமாக விஷப்பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குண்டுங் குழியுமாக உள்ள மண் சாலையை தார்செசாலையாக அமைத்து தர வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.