மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் கோரிக்கை
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர், கலெக்டரிடம் nபாதுமக்கள் மனு
By : King 24x7 Website
Update: 2023-12-16 18:41 GMT
சக்கராம்பாளையத்தில், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டிய நபர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கலெக்டரிடம் மக்கள் மனு அளித்தனர். எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், சக்கராயம்பாளையத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை அப்பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர், மூன்று லாரிகளின் வழியாக வெட்டி சென்றார். இதுகுறித்து மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும், போராட்டம் நடத்தியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்மீது வழக்கு பதிவு செய்து, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நேற்று, அகரம் அங்கன்வாடி மையத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோரிடம் கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, திருச்செங்கோடு வட்டாட்சியர் விஜயகாந்த் மற்றும் தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் உட்பட பலர் இருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.