கோரிக்கை விடுத்த சக அமைச்சர்கள் - உத்தரவாதம் அளித்த கே.என்.நேரு
அருப்புக்கோட்டையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட துவக்க விழாவில் திட்டங்கள் சார்ந்து சக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வைத்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி தருவதாக அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை விருதுநகர், சாத்தூர் நகராட்சிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூபாய் 444.71 கோடி மதிப்பீட்டில் புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி முடிவுற்று தாமிரபரணியில் இருந்து மூன்று நகராட்சிக்கும் குடிநீர் வந்து சேர்ந்துள்ளது.புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் முதற்கட்ட பணிகளின் துவக்க விழா அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகிய மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்டு முடிவடைந்த தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை துவக்கி வைத்தனர். இதில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நீரேற்று மையத்தில் பார்வையிட்டு குடிநீர் விநியோகத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். அதேபோல அருப்புக்கோட்டை நகராட்சிக்கு ரூ 297.25 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சரின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அமைச்சர் கே.என்.நேரு வில்லில் இருந்து இருந்து கிளம்பும் அம்பு போல கையில் இருந்து கிளம்பும் வேல் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். என்னதான் நாங்கள் அமைச்சராக இருந்தாலும் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர். என்னை தேர்ந்தெடுத்த திருச்சுழி சட்டமன்றத்துக்கு உட்பட்ட காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பகுதியிலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மேடையிலேயே அமைச்சர் கே.என். நேருவுக்கு கோரிக்கை விடுத்து பேசினார்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசுகையில் ஒரு வாரம், பத்து நாட்கள் என வெயிலில் காத்திருந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த சூழ்நிலை எல்லாம் மாற்றி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி தண்ணீர் பிடிக்கும் சூழ்நிலையை அமைச்சர் கே.என் நேரு உருவாக்கி தந்திருக்கிறார். இன்னொரு கோரிக்கையாக இந்த தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. அதை மாற்றுவதற்கு ரூ 80 கோடி கேட்டுள்ளோம். இதனால் அருப்புக்கோட்டை விருதுநகர் மல்லாக்கினறு உள்ள அனைத்து பகுதிகளும் பயன்பெறும். அடுத்த பத்து ஆண்டுகளில் குடிநீர் பிரச்சனையே இல்லை என்ற நிலை உருவாகும். அந்த ரூ 80 கோடியை போகும் வழியிலேயே அமைச்சர் கே.என். நேரு ஒதுக்கி தர வேண்டுமென மேடையிலேயே கோரிக்கை விடுத்து பேசினார். அப்போது மேடையில் சிரிப்பலை எழுந்தது.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், கலைஞர் பேராசிரியரை போல் நிதிநிலை அறிக்கையாக இந்தியாவே திரும்பி பார்க்க வைக்க கூடிய நிதிநிலை அறிக்கையாக தங்கம்தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறுக்கு தாமிரபரணி குடிநீர் வேண்டும் என தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தார். நாளை காலை கையெழுத்து போடுவதே அவருக்கு தான். மறு சீரமைப்பு பணிக்காக ரூ 80 கோடி வேண்டுமென அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார் அதையும் நாங்கள் ரெடியாக வைத்திருக்கிறோம் அதுவும் உடனடியாக வழங்கப்படும். மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளுக்கு ரூ 839 கோடியும் பேரூராட்சிகளுக்கு 94 கோடி முதலமைச்சர் வழங்கியுள்ளார். 3 ஆண்டு காலங்களில் 2 கோடியே 35 லட்ம் பேருக்கு பாதுகாக்கம்மபட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியுடன் அரசு வந்தது. அத்தனை நிதி நெருக்கடியிலும் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கு முன் உதாரணமாக உள்ளது என பேசினார்.