வீட்டில் அடைத்து வைத்திருந்த 18 நாய்கள் மீட்பு

காட்டுப்பாக்கம் பகுதியில் வீட்டில் அடைத்து வைத்திருந்த 18 நாய்கள் மீட்கப்பட்டது.

Update: 2024-05-17 13:52 GMT

வீட்டில் அடைபட்டு கிடந்த நாய்கள்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை பிரியா என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தார். அதில் பல்வேறு நாய்களை அடைத்து வைத்து பராமரித்து வந்தார். அதுமட்டுமின்றி வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வீடுகளில் பராமரிக்க முடியாத நாய்களை இங்கு கொடுத்துவிட்டு செல்லும் நிலையில் அதற்கான பணத்தை பெற்று பிரியா அந்த நாய்களை பராமரித்து வந்துள்ளார்.

இதனால் அந்த வீட்டில எப்போதும் அதிக அளவில் நாய்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நாய்கள் பராமரிக்கப்படாமல் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. மேலும் பிரியாவும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் நாய்களுக்கு முறையாக உணவுகள் ஏதும் வழங்கப்படாமல் அவை குரைக்கத்தொடங்கின. மேலும் அதன் மலம், சிறுநீர் சுத்தப்படுத்தப்படாததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. நாய்களுக்கு வழங்கப்பட்ட மீதி இருந்த இறைச்சிகள் அழுகி கிடந்தன. மேலும் உணவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த நாய்க்ள் நாள்முழுவதும் குரைத்து கொண்டே இருந்தன. பெரும்பாலான நாய்கள் நோய்வாய்ப்பட்டு கிடந்தன.

இதனை கவனித்த பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் தங்களது மாடியில் இருந்து நாய்களுக்கு உணவுகளை வீசினர். இதற்கிடையே கடும் துர்நாற்றம் மற்றும் நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தனியார் தொண்டு நிறவனத்தினரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விலங்குகள் நல வாரிய அமைப்பில் உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர் மதனகோபால் தலைமையில் தனியார் விலங்குயகள் நல ஆர்வலர்கள் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் பரிதாபமான நிலையில் நாய்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

"3 ஆயிரம் சதுர அடி கொண்ட வீட்டின் அறைகள், மொட்டை மாடி மற்றும் வீட்டின் பாதை அனைத்தும் நாய்களின் மலம், சிறுநீர் மற்றும் அழுகிய உணவுகளால் துர்நாற்றம் வீசியது. பெரும்பாலான நாய்களுக்கு தோல் அலர்ஜி நோய், ஒன்றோடு ஒன்று சண்டை போட்டதில் அதன் உடல்களில் காயம் மற்றும் உரிய பராமரிப்பு இல்லாமல் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து அங்கிருந்த 18 நாய்களை மீட்டனர். இதுபற்றி பராமரிப்புக்காக விட்டுச்சென்ற அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்களது நாய்களை மீட்டுச்சென்றனர். மேலும் உரிமையாளர்கள் வராத நாய்களை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், தனியார் விலங்குகள் நல பராமரிப்பு மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. "இது குறித்து பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டை வாடகைக்கு எடுத்து நாய்களை பராமரித்து வந்த பிரியா எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தலைமறைவாக உள்ள அவரிடம் மனிதாபிமானமற்று நாய்களை பராமரிக்காமல் வீட்டை பூட்டி விட்டு சென்றது ஏன் என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மதன் குமார் என்பவர் கூறும்போது, இங்கு 30 நாய்கள் வரை இருந்தன. ஆனால் அதனை உரிய முறையில் பராமரிக்கவில்லை. நாய்களின் குரைப்பு சத்தம் மற்றும் துர்நாற்றம் தாங்கமுடியவில்லை. இதனால் அருகில் வசிக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்றார்.

Tags:    

Similar News